தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, ஜூன் 7ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.