பசிபோக்கும் பணியில்ஈடுபடுங்கள்:திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஊரடங்கினால் தமிழக மக்களுக்கு தடை ஏற்படாமல் பசியாற்றுங்கள் என திமுகவினருக்கு மு.கஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, என்றும் உங்களில் ஒருவன் எழுதும் மடல், உங்கள் உழைப்பாலும் மக்களின் ஆதரவுடனும் முதலமைச்சர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் என் முன்னே சவாலான பெரும்பணி இருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள். பொறுப்பேற்ற நாளைவிட, கொரோனாவைக் கட்டுப்படுத்திவிடடோம் என்ற செய்தி வரும் நாள்தான் எனக்கு மகிழ்ச்சியான நாள் . நம் அயராத உழைப்புக்கான உண்மையான வெற்றி நாளும் அதுதான்.
கொரோனா இரண்டாவது அலையின் கொடுந்தாக்குதலில் இருந்து தமிழகத்தைக் காக்கின்ற பணியை அனைத்துத் தரப்பினரையும் இணைத்து மக்கள் இயக்கமாக மேற்கொண்டிருக்கிறது நமது அரசு. மே 24 (திங்கள்) முதல், ஒருவார காலத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என மருத்துவ நிபுணர்களுடனும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசித்து முடிவெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கால முதல்கட்ட நிவாரண நிதியான 2000 ரூபாயை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றிடுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்.
கொரோனாவின் இரண்டாவது அலையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் நோய்ப் பரவல் சங்கிலியை உடைத்திடவும், மூன்றாவது அலை குறித்த மருத்துவத்துறை வல்லுநர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டு முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ளவும் இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன். உடன்பிறப்புகளாம் உங்களின் உறுதுணையை எதிர்பார்க்கிறேன்.
முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், 'ஒன்றிணைவோம் வா' செயல்திட்டத்தை மேற்கொண்டு வரும் தி.மு.கழகத்தினர் மக்களின் அடிப்படைத் தேவையான உணவினை வழங்கிடும் பணியில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏழை - எளிய மக்கள், வீட்டில் சமைக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட யார் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து, உணவைச் சமைத்து அவர்களுக்கு வழங்கி, பசி போக்கிடும் பெரும்பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
எவ்வித விதிமீறல்களுக்கும் இடம்தராமல், இராணுவத்திற்கு நிகரான கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் உதவிப்பணிகளை மேற்கொண்டிட வேண்டும். உணவுப் பொட்டலங்களை வழங்கிடும்போது, எக்காரணம் கொண்டும் கூட்டம் கூடக்கூடாது. தேவைப்படுபவர்களின் வசிப்பிடம் அருகே சென்று வழங்குவதே சரியானதாக இருக்கும். முகக் கவசம், தனிமனித இடைவெளி இவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்திட வேண்டும்.
ஊரடங்கில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் காய்கறி - மளிகைப் பொருட்கள் வழங்குவதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்று நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தேவைப்படுவோரின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். கூட்டம் தவிர்ப்பதே கொரோனா தொற்றுச் சங்கிலியைத் தகர்ப்பதற்கான முதல் நடவடிக்கை என்பதை உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பிணி நீக்கும் போர்க்களம் இது. இதில், பசிப் போக்கும் பெரும்பணியை மேற்கொள்வீர்.
தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்து, தடுப்பூசி ஆகியவை நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்குத் தடையின்றி கிடைத்திடவும், நோய்த் தொற்றுச் சங்கிலியைத் தகர்த்திடவும், உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்கி, பேரிடர் காலத்திலிருந்து முழுமையாக மீண்டிடவும் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள நான் பணியாற்றுகிறேன். தவிர்க்க முடியாத இந்த முழு ஊரடங்கினால் தமிழக மக்களின் உணவுத் தேவைக்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் பசியாற்றுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.