சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளி களுக்கான மரப்பாதை சேதம்: மக்கள் நீதி மய்யம் புகார்

சிதிலமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை அமைத்த ஒப்பந்ததார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-12-10 16:00 GMT

பைல் படம்

சிதிலமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை அமைத்த ஒப்பந்ததார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிங்காரச் சென்னை 2.0திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகில் சென்று கடல் அலைகளை மாற்றுத்திறனாளிகள் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் அவர்களுக்கான பிரத்யேக மரப்பாதை சுமார் 1.14கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு அதனை கடந்த நவம்பர் 27ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தது மாற்றுத்திறனாளிகளை மகிழ்வடையச் செய்ததோடு, பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி உருவான மாண்டஸ் புயலின் சீற்றத்தால் வெள்ளிக்கிழமை (09.12.2022) மாற்றுத்திறனாளி களுக்கான பிரத்யேக மரப்பாதை சின்னாபின்னமாகி உருக்குலைந்து போயுள்ளது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஏனெனில் அரசு அமல்படுத்தும் எந்த ஒரு திட்டங்கள் என்றாலும் திட்டமதிப்பீட்டில் பாதியளவிற்கும் மேல் கையூட்டாக போய்விடும் என்பது எழுத்தப்படாதவிதி என்பதும், மீதமுள்ள தொகையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தரமற்ற முறையில் தான் செயல்படுத்தப்படும் என்கிற கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவி வரும் சூழலில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் அதனை உறுதிபடுத்தியும் உள்ளன.

அந்த வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் சுற்றுப்புறச்சூழல் காரணமாக இரும்பு, சிமெண்ட், பிளாஸ்டிக் போன்றவை பயன்படுத்தக் கூடாது என்பது விதியாக இருப்பதால் தான் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக நடைபாதை முழுக்க, முழுக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரேசில் மரங்கள் கொண்டு மரப்பாதையாக உருவாக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடற்கரை என்றாலே புயல், சூறாவளி காற்றின் தாக்கம் இருக்கும் என்பதும், மழைக்காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதும் சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் எனும் போது மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக மரத்திலான நடைபாதை நீண்டகாலம் உழைக்கக் கூடிய வகையில் தரமான மரங்களைக் கொண்டு வலுவாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக மரத்திலான நடைபாதை அமைக்கப்பட்டு, திறப்பு விழா கண்ட சில வாரங்களிலேயே உருவான ஒரு புயலுக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மரப்பாதை சிதிலமடைந்து போயிருப்பதின் மூலம் அந்த பாதை தரமற்ற மரங்களைக் கொண்டு, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதும், மாற்றுத்திறனாளிகளின் பெயரால் மக்களின் வரிப்பணம் சுமார் 1.14கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

எனவே 1.14கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சேதமடைந்த அந்த தரமற்ற மரப்பாதையை அமைத்த ஒப்பந்ததாரரே அவர்களது சொந்த செலவில் சீரமைத்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க அரசு உத்தரவிட வேண்டும். அத்துடன் தரமற்ற வகையில் அந்த மரப்பாதையை அமைத்தவர்கள் மீதும், அந்த திட்டத்தை தீவிரமாக கண்காணிக்க தவறியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி அந்த மரப்பாதையை தங்களின் செலவில் சீரமைத்து தர தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் மக்கள் நீதி மய்யம்  தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News