பொறியியல் 2ம் கட்டக் கலந்தாய்வு நிறைவு: 31,662 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக இதுவரையில் 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-09 17:15 GMT

பைல் படம்

2021- 22 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் கடந்த செப்.14-ம் தேதி வெளியானது. இதில் 13 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தை தக்க வைத்தனர்.

இதில், சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த செப்.17 -ம் தேதி முதல் 24ம் தேதி வரையும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.27 தேதி முதல் அக்.17-ம் தேதி வரையும் நடத்தப்பட்டு வருகிறது. துணைக் கலந்தாய்வு அக்.19ம் தேதியும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்.24ம் தேதியும் நடக்க உள்ளது. அக்.25ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

இதற்கிடையே இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வு அக்.5ம் தேதி தொடங்கியது. இதில் சுமார் 31,000 மாணவர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லுாரிகளின் பெயரைப் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் 6ம் தேதிக்குள் பதிவு செய்தன. அவ்வாறு பதிவு செய்த மாணவர்களுக்கு அக்.7ம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அக்டோபர் 8ம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்தி, கல்லுாரியை உறுதி செய்த மாணவர்களுக்கு, இன்று கல்லூரி சேர்க்கைக்கான இறுதி உத்தரவு இணையதளம் மூலம் வழங்கப்பட்டது.

அதன்படி, முதல்கட்டக் கலந்தாய்வில் 11,224 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 2வது கட்டக் கலந்தாய்வு முடிவில் 20,438 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக இதுவரையில் 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி6 ஆயிரத்திற்க்கும் அதிகமான இடங்கள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 3ம் கட்டக் கலந்தாய்வு, 4ம் கட்டக் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News