சென்னை விமானநிலையத்தில் 3 பெண்கள் கைது: சுங்க அதிகாரிகள் அதிரடி
சென்னை விமானநிலையத்தில் தங்கம் கடத்தியதாக 3 பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சோ்ந்த 3 பெண்கள் ஒரு குழுவாக அந்த விமானத்தில் வந்தனா். அவா்கள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனர். ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை நிறுத்தி மீண்டும் உள்ளே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கூறுவது சம்பந்தமில்லாத பதிலாக இருந்தது.
இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள் இந்த 3 பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை சோதனையிட்டனர். அப்போது அந்தப் பெண்கள் தலையில் அணிந்திருந்த "விக்" எனப்படும் அலங்கார கூந்தலுக்குள் தங்க வளையல்கள், சிறு தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதோடு அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்கப்பசைகள் அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்ததையும் கண்டுப்பிடித்தனா்.
3 பெண் பயணிகளிடமிருந்து மொத்தம் 525 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் 23 லட்சம். இதையடுத்து நூதன முறையில் தலை கூந்தலுக்குள் தங்கத்தை வைத்து கடத்தி வந்த 3 இளம்பெண்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அவா்களிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.