சென்னை வங்கிகளில் ரூ.6 கோடி மோசடி: கணவன், மனைவி உள்பட 9 பேர் கைது
சென்னை வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.6 கோடி மோசடி செய்த சம்பவம் குறித்து கணவன் மனைவி உள்பட 9 பேர் கைது.
கடன் வாங்க போலி ஆவணங்கள் கொடுத்து சென்னை வங்கிகளில் ரூ.6 கோடி மோசடி செய்த சம்பவம் குறித்து கணவன் மனைவி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு போலி ஆவணங்களை கொடுத்து ரூ.6 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக 5 வங்கிகள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கிளை மேலாளர் லைசன் என்பவர் அளித்த புகாரில் தனியார் நிறுவனம் மூலமாக கடன் பெற போலி ஆவணங்களை வங்கியில் கொடுத்து ரூ.1 கோடியே 51 லட்சத்து 77 ஆயிரம் பணத்தை கடனாக பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வங்கி ஊழியரான நஜிமுதீன் போலியான நபர்களின் பெயரில் 44 வங்கிக் கணக்குகளை தொடங்கி 15 பேருக்கு தனி நபர் கடன் வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று போலி ஆவணங்களை கொடுத்து கடன் பெற்ற வண்டலூர் பாலாஜி நகரை சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவரும் கைதானார்.
இந்தியன் வங்கி கீழ்ப்பாக்கம் கிளை மேலாளர் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் ரைஸ் மில் வாங்குவதற்கும், வீடு கட்டவும் போலி ஆவணங்களை தயார் செய்து வங்கியில் கொடுத்து ரூ.1 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரம் கடன் வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் காமாட்சி நகரை சேர்ந்த முத்துவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் வைஸ்யா வங்கியின் நுங்கம்பாக்கம் கிளை மேலாளர் அல்போன்ஸ் ராஜேஷ் அளித்த புகாரில் வேளச்சேரியை சேர்ந்த மிராங்க்ளின் என்ற பெண் தனியார் நிறுவனம் நடத்துவதாக கூறி வீட்டுக்கடன் பெற போலி ஆவணங்களை கொடுத்து ரூ.49 லட்சத்து 12 ஆயிரம் கடன் பெற்று ஏமாற்றியதாக குறிப்பிட்டு இருந்தார். இதன் பேரில் மிராங்க்ளின், அவரது கணவர் தங்கராஜ் மற்றும் கோவிந்தராஜ், சையது அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் உதவி பொதுமேலாளர் முருகன் அளித்த புகாரில், ஷியாமளாதேவி என்பவர் வீட்டுக்கடன் பெற போலிஆவணங்களை கொடுத்து ரூ.75 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த மோசடிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மேடவாக்கம் கிளை மேலாளர் பாலாஜி உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதன் பேரில் அவரும் கைது செய்யப்பட்டார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் விருகம்பாக்கம் கிளையிலும் மோசடி நடைபெற்றுள்ளது. இதன் கிளை மேலாளர் ராகேஷ் அளித்த புகாரில், முகமது கனி என்பவர் வீட்டுக்கடன் பெற போலி ஆவணங்களை கொடுத்து ரூ.1 கோடியே 95 லட்சம் பணம் பெற முயற்சி செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதன் பேரில் ஈக்காட்டுத் தாங்கலை சேர்ந்த முகமது கனி கைது செய்யப்பட்டார். கைதான அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற மோசடிகளை தடுக்க வங்கி மேலாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.