ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் : அமைச்சர் கே.என். நேருவின் நேரடி கள ஆய்வு விவரம்
ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து திருச்சி காவிரி ஆறு நீரேற்றும் நிலையம் முதல் கடைசி குடிநீர் பை் வரை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை நகராட்சி நிர்வாகம் நகர்ப்பகுதி குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 14 ம் தேதி அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள ஆய்வு செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரங்களை தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வா. தட்சிணாமூர்த்தி இன்று வெளியிட்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
இராமநாதபுரம் மாபெரும் கூட்டு குடிநீர் திட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் அண்டை மாவட்டங்களில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளில் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
அதற்கிணங்க நகராட்சி நிர்வாகம் நகர் பகுதிிமற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு 14ம் தேதி அன்று காவிரி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்ட ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கள ஆய்வு செய்தார்கள்.
அதன்பின்னர் ஆலவயல் நீர் உந்து நிலையம் மற்றும் திருபத்தூர் பேரூராட்சி நீர் உந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு அருகில் 1100 விட்டமுள்ள PSC குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்த பகுதிகளை பார்வையிட்டார். பின்பு தாயமங்கலம் பகுதியில் 1000 மிமீ விட்டமுள்ள PSC குழாயில் ஏற்பட்ட அடைப்பை உடனடியாக போர் கால அடிப்படையில் சரி செய்து பாதிக்கபட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ஆணையிட்டார்.
மேலும் அமைச்சர் , மேலத்தூவல், முதுகுளத்தூர் பேரூராட்சி, பேரையூர், கமுதி பேரூராட்சி, கோவிலாங்குளம், சாயல்குடி, நரிப்பையூர், மற்றும் திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
பின்னர் பழுதடைந்த நரிப்பையூரில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாளொனறுக்கு 60 மில்லியன் லிட்டர்கள் குடிநீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குதிரைமொழி திட்டத்தின் தலைமை இடத்தை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.
இவை தவிர அமைச்சரின் ஆணைக்கிணங்க தளவாட சாமான்களும் 1000 மில்லி மீட்டர் இரும்பு குழாய்களும் வரவழைக்கப்பட்டு தாயமங்கலம் அருகிலுள்ள உடைப்புகள் சரி செய்யப்பட்டன.
மேலும் தலைமை நீரேற்று நிலையத்தின் மின்விசை பம்புகள் இயக்கப்பட்டு சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு தற்போது குடிநீர் சீராக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
எனினும் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பெறுவதற்கு ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மேற்பார்வை பொறியாளர் அவர்களை தொலைபேசி எண் 04575 - 240481 இல் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது சிவகங்கை மாவட்ட குடிநீர் புகார்களுக்கு நிர்வாக பொறியாளர் அவர்களின் தொலைபேசி எண் 04575 - 240314 மற்றும் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தொடர்பான புகார்களுக்கு நிர்வாக பொறியாளர் அவர்களின் தொலைபேசி எண் 04567 - 220540 ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.