வடசென்னை ரவுடி போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர் : திருந்திவிட்டதாக கதறல்

வடசென்னையின் பிரபல ரவுடி கல்வெட்டு ரவி, நான் திருந்திவிட்டேன், என்னை விட்டு, விடுங்கள் என்று கூறி மாநகர போலீஸ் கமிஷ்னரிடம் மனு அளித்தார்.;

Update: 2021-07-29 09:10 GMT

வடசென்னை பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடியாக வலம் வந்த ரவி (எ) கல்வெட்டு ரவி (35). இவன் மீது பல கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் வழக்குகள் உள்ளது. பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரவுடி கல்வெட்டு ரவி நேற்று காலை கமிஷனர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்து கொடுத்த புகார் மனுவில், நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவன். எனக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நான் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். சந்தர்ப்ப சூழ்நிலையாலும், வறுமையாலும் நான் குற்றசம்பவங்களில் ஈடுபட்டேன். என் மீது போடப்பட்ட பல வழக்குகளில் எனக்கு தொடர்பு இல்லை. என் மீது போடப்பட்ட வழக்குகளால் நான் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டேன். இந்த வழக்குகளை காரணம் காட்டி என் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்படுகிறது.

நான் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டதால் என் மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி நான் எந்த குற்றசம்பவங்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து வருகிறேன்.

என் மீது குற்றம் வந்தால் போலீசார் விசாரித்து வழக்கு பதிவு செய்யலாம். என் பெயரை சில ரவுடிகள் தவறாக பயன்படுத்தி கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே, போலீசார் முறையான விசாரணை நடத்த வேண்டும். நான் திருந்தி வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ விரும்புகிறேன்.

என் மீதுள்ள வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகி பல வழக்குகளில் இருந்து விடுதலையாகி உள்ளேன். மனம் திருந்தி வாழ நினைக்கும் எனக்கு போலீசாரும் தமிழக அரசும் சுய தொழிலுக்கும் மறுவாழ்விற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் ரவுடி கல்வெட்டு ரவி கூறியுள்ளார்.

Tags:    

Similar News