மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிவாரண உதவி

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2021-11-15 12:09 GMT

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள பாக்கியா செல்லையா பள்ளியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் என்றைக்குமே மக்கள் பாதிப்படையும்போது நேரடியாகச் சென்று,அவர்களுக்கு ஆறுதல் கூறி,அதுமட்டுமல்லாமல் பல்வேறு நிவாரண உதவிகளைச் செய்கின்ற இயக்கம் அதிமுக  எம்ஜிஆர் கற்றுக்கொடுத்தார். அதுபோல அம்மா அவர்கள் கற்றுக்கொடுத்த அந்த பாடத்தின்படி தமிழகம் முழுவதும் கழகத்தினர்,கிளைக் கழகத்திலிருந்து,தலைமைக்கழக நிர்வாகிகள் வரை,எல்லோருமே மக்களுக்குத் தேவையானவற்றை செய்து வருகின்றனர்.

இந்த அவலமான திமுக ஆட்சி,விடியல் என்று சொல்லி விடியாத இந்த ஆட்சி,மக்களை ஏறுயெடுத்துக்கூட பார்க்காத இந்த ஆட்சி, இந்த ஆட்சி செய்த தவறியதை நாம் செய்யவேண்டும் என்ற வகையிலே ஒவ்வொரு தொகுதியிலும் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள்,நிர்வாகிகள்,எல்லோரும் தங்களுடைய கடமையைச் செய்துவருகிறார்கள்.

அந்த வகையில் வடசென்னை,தெற்கு,கிழக்கு சார்பில் பல பகுதிகளில் பல நாட்களாக,6 ந்தேதியிலிருந்து பணி நடைபெற்றுவருகிறது.அதுபோல ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 4 நாட்களுக்கு மேலாகச் சென்னை மட்டுமல்லாமல்,புறநகர் பகுதிகளிலும்,நேரடியாக மக்கள் பாதித்த இடங்களை எல்லாம் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.

எனவே ஆட்சி செய்த தவறியதை,ஆளும் கட்சி செய்யத் தவறியதை,கழகம் என்றும் மக்கள் பணியில் என்கின்ற வகையில் இன்றைக்கு தங்களுடைய கடமையை செய்துவருகிறது.மழை விட்டுக்கூட இந்த விடியாத அரசின் அவலமாகதான் இதனை நிச்சயமாகப் பார்க்க முடியும்.

பல இடங்களில் மறியல்கள்.தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி அதுபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் ஏறக்குறைய 1800 கோடியில் திட்டங்களைக் கொண்டு வந்தது அதன் அடிப்படையிலே மழைநீர் செல்லக்கூடிய வகையில் எல்லா வழிகளையும் நாங்கள் ஏற்படுத்தினோம்.

உதாரணத்திற்கு ராயபுரம் தொகுதியை எடுத்துக்கொண்டால் அன்றைக்கு நம்முடைய அம்மாவுடைய அரசில் பணிகளை எல்லாம் முழுமையாக மேற்கொண்டதன் காரணமாகதான் 20 செ,மீட்டர் மழை சென்னைக்கு வந்தும்கூட தண்ணீர் வடிந்துவிட்டது.

அதற்கு முன்னதாக நாங்கள் மேற்கொண்ட பணிகளை இவர்கள் செய்யவில்லை.இவர்கள் அதனைத் தூர்வாரவில்லை.2015 ஆம் ஆண்டு 3500 க்கு மேற்பட்ட மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்தோம்.அதன் அடிப்படையில் நாங்கள் இந்த எண்ணிக்கையை 68 இடமாகக் குறைத்தோம்.ஆனால் தற்போது திமுக ஆட்சியில் ஒழுங்காக பராமரிப்பு பணியைச் செய்திருந்தால்,அந்த பழைய நிலைமைக்கு போயிருக்க வாய்ப்பில்லை.

திமுக அரசின் நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தினால் சென்னை மக்களும்,புறநகர் மக்களும் அவதிபடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News