கல்வி வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்: அமைச்சர் மஸ்தான்
ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் தொடர்ந்து ஏராளமான கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவது திமுக அரசு தான்
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பும், சம அந்தஸ்தும் அளிக்க வேண்டும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி தண்டையார்பேட்டை இ.சி.ஐ. தேவாலய மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தேவாலய பாதிரியார்கள் 180 பேருக்கு புத்தாடைகளை வழங்கினார். மேலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புத்தாடை உணவு பொருள்கள் உள்ளிட்டவைகளை அமைச்சர் வழங்கினார்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது: கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்புகளையும், சம அந்தஸ்தையும் கட்டாயம் அளித்திட வேண்டும். இதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் தொடர்ந்து ஏராளமான கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவது திமுக அரசு தான்.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் கல்விக் கூடங்களை நடத்துவதில் கிறிஸ்தவ அமைப்புகள், தேவாலயங்கள், அறக்கட்டளைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இக்கல்வி நிலையங்களில் படித்தவர்கள் பலரும் தங்களது வாழ்க்கையில் உன்னத நிலையை எட்டியுள்ளனர்.
எல்லோருக்குமே அவரவர் சார்ந்திருக்கின்ற மதத்தின்பால் பற்றும் நம்பிக்கையும் இருப்பது என்பது இயல்பானது. அதே நேரம் ஒரு மதத்தினரின் செயல்பாடுகளில் மற்றொரு மதத்தை சார்ந்தவர்கள் தலையிட்டு இடையூறு செய்வதால்தான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விழாக்களில் பங்கெடுப்பதன் மூலம் அனைத்து மத நல்லிணக்கத்தை அனைவரிடத்திலும் ஏற்படுத்திட முடியும் என்றார் அமைச்சர் மஸ்தான்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இளைய அருணா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி பெரம்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.டி. சேகர், மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், பகுதி செயலாளர்கள் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், ஆர்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.