திறந்த முதல் நாளிலேயே பள்ளிக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்
சென்னையில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாததால் பள்ளி தலைமையாசிரியர் அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
சென்னை ராயபுரம் சூரியநாராயண சாலையில் உள்ள தமிழக அரசு உதவி பெறும் வள்ளல் எட்டியப்பன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 9000 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2017 ம் ஆண்டு பள்ளிக்கு புதியதாக வரி செலுத்த வேண்டும் என்று ராயபுரம் மண்டல மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளாக வரி பாக்கி 4,68,217ரூபாய் செலுத்தாததால், தற்போது பள்ளி திறந்தப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பள்ளியின் நிர்வாகத்திடம் சீல் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சியின் அதிகாரியிடம் தங்கள் பள்ளி தமிழக அரசு உதவிபெறும் பள்ளி என்பதால் வரியை குறைத்து போடும்படி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், வரியை குறைத்து போட்ட பின்பு பணத்தை கட்டுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதனை ஏற்க மறுத்த மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளியின் தலைமையாசிரியர் அறை மற்றும் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துச் சென்றனர்
இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் தங்களது மாற்றுச் சான்றிதழை வாங்குவதற்காக பள்ளிக்கு வந்து சான்றிதழ் பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.
பள்ளி திறந்த நாளிலேயே மாநகராட்சி அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறைக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வளசரவாக்கம்,மணலி,அம்பத்தூர்,ஆகிய மண்டலங்களில் பல கோடி செலுத்தாமல் உள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.