மக்கள் மகிழ்ச்சியா இருக்க இதை செய்யுங்க போதும்:பாமக ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மதுக்கடைகளை மூட வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-09-17 11:30 GMT

பாமக நிறுவனர் ராமதாஸ் 

மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் 75 சதவீதம் பேர், 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக     பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல விதமான புற்று நோய்கள், கல்லீரல் அழற்சி, மாரடைப்பு உள்ளிட்ட 200 வகையான நோய்களுக்கு ஆளாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களை தற்கொலைக்குத் தூண்டும் மனநிலையை மது போதை உருவாக்குகிறது.

தமிழ்நாட்டு இளைஞர்களில் சுமார் 37 விழுக்காட்டினர், மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் 75 சதவீதம் 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 10 முதல் 20 விழுக்காட்டை மதுப்பழக்கத்தால் நாம் இழக்கிறோம். இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு மதுதான் காரணமாகும். பல்லாயிரக்கணக்கான இளம்பெண்கள் கைம்பெண்கள் ஆவதற்கும், குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறுவதற்கும் மதுதான் காரணமாக உள்ளது.

தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாய்ப்பிருந்தால் உடனடியாகவோ இல்லாவிட்டால் படிப்படியாகவோ, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மதுபோதைக்கு அடிமையானவர்களை மீட்க தமிழகம் முழுவதும் போதை மீட்பு சிறப்பு மையங்களை அமைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News