சென்னை விமானநிலையத்தில் அமைச்சருடன் போலீஸ் வாக்குவாதம்: உயரதிகாரிகள் சமாதானம்

விமான நிலையத்தில் தமிழக அமைச்சருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-30 05:25 GMT

தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை 6 மணி இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில், சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்வதற்கு சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு காலை 5.15 மணிக்கு வந்தாா்.

அப்போது பாதுகாப்பு சோதனை பிரிவில் அமைச்சரின் கைப்பையை ஸ்கேன் மூலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் ஒருவா பரிசோதித்தாா். அமைச்சா் பையில் 2 லேப்டாப்கள் வைத்திருந்தாா். இதனைப்பாா்த்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா், அமைச்சரிடம்  லேப்டாப்களை ஏன் எடுத்துச்செல்கிறீா்கள்? என்று கேட்டுள்ளா. உடனே அமைச்சா் நான் மாநில நிதி அமைச்சா்; எனது அவசர தேவைக்காக எடுத்து செல்கிறேன் என்றாா். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டாா்.

இதையடுத்து அமைச்சரும் வாக்குவாதம் செய்தாா். மேலும் அந்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் சரியாக புரியவில்லை. இந்தி மட்டுமே பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சரும் இந்தியில் வாக்குவாதம் செய்துள்ளா. இதனால் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக விமானநிலைய உயா் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்தனா். அமைச்சரை சமாதானப்படுத்தியபோது, பயணிகளுக்கு உதவி செய்யத்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனா். அவா்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக அல்ல. பயணி ஒருவா் 2 லேப்டாப் விமானத்தில் எடுத்து செல்லக்கூடாது என்று எதாவது விதிமுறை உள்ளதா? என்று அமைச்சர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு  அதிகாரிகள், அப்படி எந்த விதிமுறையும் கிடையாது என்று கூறி, நடந்த சம்பவத்திற்கு அமைச்சரிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனா். அதோடு அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரும் மன்னிப்பு கேட்டாா். அதன்பின்பு அமைச்சா் சமாதானமாகி விமானத்தில் ஏற புறப்பட்டு சென்றாா்.

இதனால் சென்னை விமானநிலையத்தில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த ஆண்டு இதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் ஒருவா், திமுக எம்.பி., கனிமொழியிடம் பாதுகாப்பு சோதனை பிரிவில் பிரச்னை செய்தது பெரும் சா்சையானது. அதன்பின்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை உயா் அதிகாரிகளும், விமானநிலைய உயா் அதிகாரிகளும் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News