வியாசர்பாடியில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
சென்னை வியாசர்பாடி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதாக செம்பியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செம்பியம் காவல்நிலைய பகுதிகளில் தீவிரமாக செம்பியம் போலீசார் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் வியாசர்பாடி பெரியார் நகர் வ.உ.சி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு செம்பியம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வீட்டிலிருந்து ஒரு டன் ரேஷன் அரிசியை செம்பியம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த மாணிக்கம் வயது 74 என்ற நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசியை வாங்கி இவர் ஆந்திராவுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உணவு பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாருக்கு செம்பியம் போலீசார் தகவல் தெரிவித்தனர். உணவு பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் செம்பியம் காவல் நிலையத்திற்கு வந்து மாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.