பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசியதாவது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பின்றி வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்ட இந்த தருணத்தில் ஒருபுறம் பெட்ரோல் டீசல் விலையும் ஒரு புறம் கேஸ் சிலிண்டர் விலை மற்றொருபுறம் கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என குற்றம் சாட்டினார்.
அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு இந்த பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு நாடாக இந்த நாட்டை உருவாக்க மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2014ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகள் பெட்ரோலுக்காக 9.50 காசுகளும் டீசலுக்கு 3.50 காசுகளும் அளித்ததாகவும் ஆனால் தற்போது 33 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேபோல் உலகத்திலேயே பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ள நாடு இந்தியா எனவும் மற்ற வல்லரசு நாடுகள் பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்து மக்கள் சேவை செய்யும் பொழுது இந்தியா ஏன் அதை செய்ய மறுக்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் மத்திய மாநில அரசுகள் இந்த பெட்ரோல் டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல் தமிழகத்திற்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழக அரசு அதனை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல் ஹைட்ரோகார்பன் விவகாரத்திலும் எப்போதும் மக்களுக்காக தேமுதிக துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.