தொழில் போட்டியில் தகராறு: காய்கறி வியாபாரி படுகொலை -6 பேர் கைது
கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 51 )கொடுங்கையூர் முத்தமிழ் நகர் தெற்கு அவன்யூ பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இவர் காய்கறி கடை நடத்தி வரும் அதே பகுதியில் குப்பன் என்பவரின் மகன்கள் ஆனந்த் மற்றும் அரவிந்த் ஆகியோர் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். அடிக்கடி இவர்களுக்குள் இடப் பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை 5 மணி அளவில் கோபி காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு ஆட்டோவில் வந்த அரவிந் ஆனந்த் மற்றும் நான்கு பேர் கோபியை சரமாரியாக வெட்டினர். இதில் கோபி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தடுக்க வந்த அவரது மனைவி லதா கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார், கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மற்றும் லதாவை சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்த நிலையில், தப்பி ஓடியவர்களின் செல்போன் பதிவை வைத்து கொடுங்கையூர் போலீசார் ஆறு பேரையும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்துள்ளனர். அதன்படி கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் 30 , அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் 27. செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் 27. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கின்ற பில்லா 30 , கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பரத் 20. அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் 20 ஆகிய 6 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோபி கடைபோடும் இடத்தின் அருகிலேயே அண்ணன் தம்பிகளான அரவிந்த் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் காய்கறிக் கடை போட்டு வந்துள்ளனர். கோபி காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளார் ஆனால அந்த விலைக்கு அரவிந்த் மற்றும் ஆனந்தால் காய்கறிகளை விற்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பி இருவரும் சம்பவத்தன்று மதுபோதையில் நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்து கோபியை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட 6 பேரிடமும் கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.