பெரம்பூர்: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சி
பெரம்பூரில், மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.;
சென்னை பெரம்பூர் கென்னடி ஸ்கொயர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், வயது 32 பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவி உள்ளார். நேற்று இரவு அம்பத்தூரில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது, ராஜேஷ் குடித்து விட்டு வந்துள்ளார். இதனை அவரது மனைவி நந்தினி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, முற்றியுள்ளது.
இதில் கோபம் அடைந்த ராஜேஷ், வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து தனக்குத் தானே வயிற்றில் குத்திக் கொண்டார். ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஷ் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.