பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் எச்சில் துப்புவது, குப்பைகளை கொட்டுவது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் பலர் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டும் தனிநபர் இல்லங்களுக்கு 100 ரூபாய், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1,000 ரூபாய், பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய், பொது இடங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை ஒரு டன் வரை கொட்டுபவர்களுக்கு 2000 ரூபாய்,
ஒரு டன்னுக்கு மேல் கொட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய். திடக்கழிவுகளை எரிக்கும் தனியார் இடங்களுக்கு 500 ரூபாய் பொது இடங்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.