நவம்பர் 1- தமிழர் தாயகம் உருவான நாளில் உறுதி ஏற்போம்: வைகோ அறிக்கை

Tamilnadu Political News in Tamil -1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது;

Update: 2022-11-01 01:30 GMT
நவம்பர் 1- தமிழர் தாயகம் உருவான நாளில் உறுதி ஏற்போம்: வைகோ அறிக்கை

மதிமுக பொதுச்செயலர் வைகோ(பைல் படம்)

  • whatsapp icon

Tamilnadu Political News in Tamil -1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, தமிழர் தாயகமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் வரலாறு நீண்ட பின்னணி கொண்டது ஆகும்.

இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மொழிவாரியாக மாநிலங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் நிர்ணய சபையில் மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், 1948 ஜூன் 17 ஆம் நாள், அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.தார் அவர்கள் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார். ஆனால், இந்த ஆணையம், இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பது தேவையற்றது;  நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் உருவாக்கப்பட்டால்தான் புவியியல், இயற்கை வளங்கள் சார்ந்த பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். நாட்டின் ஒற்றுமையும் பாதுகாக்கப்படும் என்று பரிந்துரை செய்தது.

தார் ஆணையத்தின் பரிந்துரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தார் ஆணையத்தின் பரிந்துரை மற்றும் மொழிவாரி மாநில பிரிவினை பற்றி ஆராய 1948 டிசம்பரில் ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகிய மூவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு ஜே.வி.பி. குழு என்றும் அழைக்கப்பட்டது.

1949 ஏப்ரலில், இக்குழுவும், மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு எதிரான பரிந்துரையையே அளித்தது. மேலும், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. குழு அறிக்கை தந்தது.இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், 1952 அக்டோபர் 19 இல், மொழிவாரி ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி பொட்டி ஸ்ரீராமலு சாகும்வரை உண்ணாவிரத அறப்போராட்டத்தை சென்னையில் தொடங்கினார். 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து 1952 டிசம்பர் 15 அன்று உயிர் நீத்தார். இதனால் ஆந்திராவில் பெருமளவில் வன்முறை வெடித்தன. காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானார்கள்.

1952 டிசம்பர் 29 இல் ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். இதன் பின்னர்தான் தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டு, அக்டோபர் 1, 1953 இல் ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவானது.ஆந்திராவைத் தொடர்ந்து பிற தேசிய இனங்களும் மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கையை எழுப்பின. நேருவின் அரசு, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஃபசல் அலி தலைமையில், கே.எம்.பணிக்கர், என்.எஸ்.குன்ஸ்ரு உள்ளிட்டோரைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் ஒன்றை அமைத்தது.

இதனிடையே தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களையும் ஒருங்கிணைத்து 'தட்சிணப் பிரதேசம்' என்று உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு தந்தை பெரியார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். முதல்வர் காமராஜர் இதற்கு இசைவு அளிக்கக் கூடாது என்று பெரியார் வலியுறுத்தினார். பின்னர் இத்திட்டத்தை கைவிட்ட இந்திய அரசு, 1955 செப்டம்பரில், ஃபசல் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அதன்பின்னர் 1956 நவம்பர் 1 ஆம் நாள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் அடங்கிய பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. தமிழ் மொழி பேசும் மக்களின் தாயகமாக சென்னை மாநிலம் உருவானது.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழகம் பல பகுதிகளை இழந்தது. தமிழர் தாயகத்தின் எல்லைகளை வரையறுக்க வடக்கு எல்லைப் போராட்டமும், தெற்கு எல்லைப் போராட்டமும் மிக வீரியமாக முன்னெடுக்கப்பட்டன .மார்ஷல் நேசமணி, எஸ்.சாம் நத்தானியல், பி.எஸ்.மணி உள்ளிட்டத் தலைவர்கள் மக்களைத் திரட்டி, தெற்கு எல்லைப் போராட்டத்தை நடத்தினர். போராட்டக் களத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு எல்லையைக் காப்பாற்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.பேரறிஞர் அண்ணா அவர்கள் எல்லைப் போராட்டங்களுக்கு ஆதரவு நல்கினார். திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் எல்லைப் போராட்டங்களில் பங்கேற்று சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு ஆகும்.தமிழர் தாயகம் உருவான நவம்பர் 1 இல் எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுக்கும், உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

தமிழ்த் தேசிய இனம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து, ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துராஷ்டிரத்தை உருவாக்கக் கூப்பாடு போடும் இந்துத்துவ சனாதன சக்திகளை தமிழ் மண்ணிலிருந்து துடைத்து எறிய இந்நாளில் உறுதி ஏற்போம் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News