சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடு
சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் போன்றவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.
ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையம் போன்றவைகள் உரிமம்பெற வேண்டும் என்றால் 21 நிபந்தனைகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
சென்னையில் சமீப காலங்களில் பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதை அடிப்படையாகக்கொண்டு சென்னை மாநகரக் காவல்துறை அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் போன்றவைகளுக்கு தொழில் உரிமம் பெற சென்னை மாநகராட்சியில் சில புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதற்கான ஒப்புதல் தீர்மானம் நேற்றைய மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய விதிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:-
- தொழில் உரிமம் பெறுவதற்கு, ஒற்றை சாளர முறையில், சென்னை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத் துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறைகளிடம் தடையில்லாச் சான்று பெறுதல் அவசியமாகும்.
- ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் போன்ற உரிமம் பெறுவதற்கு 21 நிபந்தனைகளும் அவைகளை செயல்படுத்த 27 வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
- கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வெளிப்புற கதவு வேலை நேரத்தில் திறந்தே இருக்க வேண்டும்.
- அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே இயங்கவேண்டும்.
- வாடிக்கையாளர்களுக்கு தனி வருகை பதிவேடு வைத்திருக்க வேண்டும்.
- எந்த வகையிலும் பாலியல் தொடர்பான சேவைகள் வழங்குவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
- காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்வார்கள்.
- CCTV கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
- தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்க அனுமதிக்க கூடாது.
- ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்தவருக்கு சேவை வழங்கவேண்டும்.
- ஒருவருக்கு சேவை வழங்கியவுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளை முறையாக சுத்தம் செய்த பின்னரே அடுத்தவருக்கு சேவைவழங்க வேண்டும்.
- பக்க விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உரிமம் விண்ணப்பிப்பவர் உரிய படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.