தமிழகத்தில் 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்: அரசு அதிரடி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-05-04 01:50 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால்,  பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, அவை  நாளை மறுதினம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தினசரி அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை, அரசு விதிக்கிறது. 

அதன்படி, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் வரும் மே 6ம் தேதி முதல் 20ம் தேதி அதிகாலை 4 மணி வரையில் புதியகட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்கலாம்.

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல செயல்படலாம்.

டீகடைகள் பகல் 12 மணி வரை திறக்க அனுமதி. உள்அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம்,அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணிக்கு அனுமதிக்கலாம். 

ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் பணிபுரியலாம். மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிறுகிழமைகளில் செயல்பட அனுமதி இல்லை. இதர நாள்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News