சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் இருந்து நீதிபதி ஷமீம் மாற்றலாகி பதவி ஏற்றுக்கொண்டார்.;

Update: 2024-10-01 12:46 GMT

சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதி ஷமீம் அகமது 

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி ஷமிம் அகமது என்பவரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதி ஷமீம் அகமது நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன

புதிய நீதிபதியை வரவேற்று பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், பெண் வக்கீல் சங்கத் தலைவி ரேவதி உள்ளிட்டோர் பேசினார்கள்.

1966-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பிறந்த நீதிபதி ஷமிம் அகமது, அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், சட்டப்படிப்பும் முடித்து, 1993-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வக்கீலாக, உத்தரபிரேதசம் மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்தார். அலகாபாத் ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பதவி ஏற்றார். வருகிற 2028-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

Tags:    

Similar News