கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 46 கிரவுண்ட் நிலம் மீட்பு

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 46 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது.

Update: 2021-10-04 15:10 GMT

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட உள்ள எல்லைக்கல்லை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 46 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏழை எளிய மாணவர்கள் பயன்படும் வகையில் திறந்து வைத்தார்.

பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் பிஎஸ் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் இன்று மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

இந்த இடத்திற்கான வாடகை நிலுவை பணம் ரூ.1 கோடி பள்ளி நிர்வாகம் தரவேண்டியுள்ளது. முதல் தவணையாக ரூ.18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீது தொகை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மைதானம் ஏழை எளிய மாணவர்கள் விளையாடுவதற்காக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் விளையாட்டு தொடர்பான போட்டிகள் நடத்துவதற்கு குறைந்த செலவில் வாடகைக்கு விடப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளக்கப்பட்டுள்ளன. இதுவரை 1130 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் 188 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் எப்படி கல்வெட்டுகள் பதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதோ அதே போன்று தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் எல்லைக்கல் ஊண்டி அதில் வெள்ளை நிற வண்ணம் அடிக்கப்பட்டு, சிவப்பு நிறத்தில் அறநிலையத்துறை (HRCE)என்று தனித்துவ அடையாளத்தில் எழுதப்பட்டிருக்கும்.

கடந்த பத்து ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து,

அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் 1972 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாறன், திருக்கோயில் செயல் அலுவலர் காவேரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News