மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 46 கிரவுண்ட் நிலம் மீட்பு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 46 கிரவுண்ட் நிலம் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டது.;
அறநிலையத்துறைக்கு சொந்தமாக ராமகிருஷ்ணா மட சாலையில் உள்ள நிலத்தை கடந்த 1928ம் ஆண்டு பி.எஸ் மேல்நிலைபள்ளிக்கு விளையாட்டு மைதானமாக பயன்படுத்த 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
அப்போது, கபாலீஸ்வரர் கோயில் தனியார் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போது விடப்பட்டிருந்தது. தொடர்ந்து 1.8.1958க்கு பிறகும் இந்த குத்தகை 21 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் 82 கிரவுண்ட் மைதானத்துக்காக ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்ட குத்தகை காலம் 1979 ஜூன் 31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. அதன்பிறகு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு குத்தகை நீட்டிப்பு செய்யப்படவில்லை.
ஆனால், கோயில் நிர்வாகம் மாதம் ரூ.1250 மட்டுமே செலுத்தி வந்தது. இதற்கிடையே கடந்த 1996ல் 30 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டது.
இதில், கோயில் நிர்வாகம் சார்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தது. ஆனால், மீதமுள்ள 46 கிரவுண்ட் நிலம் பள்ளி நிர்வாகத்திடம் இருந்தது. இந்த நிலத்தை ஒப்படைக்க கோரி கடந்த 1999ல் கோயில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
ஆனால், இந்த வழக்கு அறநிலையத்துறைக்கு சாதமாக வரவில்லை. காரணம் பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை இடத்தை மீட்க வேண்டு மென்றால் 6 மாதத்துக்கு முன்கூட்டியே நோட்டீஸ் தர வேண்டும். ஆனால், அறநிலையத்துறை ஆணைப்படி 30 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் தர வேண்டும். இதை காரணம் காட்டி, கோயில் நிர்வாகத்தால் நிலத்தை மீட்பதில் சிக்கல் இருந்தது.
இந்நிலையில் கடந்த 2005ல் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் தீர்ப்பு கோயில் நிர்வாகத்துக்கு சாதகமாக வரவில்லை. மீண்டும் 2007ல் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தான் 2021 வரை நடந்து வந்தது. முன்னதாக 1999 கால கட்டத்தில் 30 கிரவுண்ட் கோயில் நிலத்தை ஒப்படைத்து விட்டோம் என்று அறநிலையத்துறைக்கு பள்ளி நிர்வாகம் கடிதம் எழுதியிருந்தது.
ஆனால், அந்த நிலத்தை அவர்கள் ஒப்படைக்கவில்லை. 2012ல் அந்த 30 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டது. அதன் பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டது. ஆனால், பள்ளி நிர்வாகம் சார்பில் தடையாணை பெறப்பட்டது.
இதற்கிடையே கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 2002ல் வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வாடகையை செலுத்தாமல் தொடர்ந்து பழைய வாடகை ரூ.1250ஐ செலுத்தி வந்தது. ஆனாலும், அந்த நிலத்தை கிரிக்கெட் போட்டிகள், தனியார் அகாடமிக்கு பயிற்சிக்கு விட்டு பள்ளி நிர்வாகம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வந்தது.
கடந்த 2016ல் மாதம் ரூ.8 லட்சம் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வாடகையையும் தற்போது வரை செலுத்த மறுத்து விட்டது. இதனால், ரூ.12.50 கோடி வரை வாடகை பாக்கி இருந்தது. இதனால், அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிலத்தை மீட்க உத்தரவிட்டார். ஆனால், பள்ளி நிர்வாகம் கடந்த 3ம் தேதி வழக்கு தொடர்ந்தது.
அப்போது நீதிமன்றம் சார்பில், இடத்தை ஒப்படைக்கவும், தினசரி வாடகை விட்டு கொள்ளலாம். பள்ளி என்பதால் வாடகையை குறைத்து அவர்களுக்கு விடவும் தெரிவித்தது. இதை தொடர்ந்து,அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் ரூ.276 கோடி மதிப்பிலான நிலம் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து வாடகை நிலுவை தொகை ரூ.50 லட்சம் பள்ளி நிர்வாகத்திடம் வசூலிக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்து வரும் நாட்களில் பள்ளி நிர்வாகம் பாக்கி தொகையை தர சம்மதித்துள்ளது. இந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் பல ஆண்டுகளாக தனியார் நிகழ்ச்சிகளுக்கும், போட்டி நடத்துவதற்கும், தனியார் அகாடமி பயிற்சிக்காகவும் வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வந்துள்ளது.
ஆனால், அந்த இடத்துக்கான வாடகையை பள்ளி நிர்வாகம் சார்பில் அறநிலையத்துறைக்கு தரவில்லை. மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 2002ல் அந்த நிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் மைதானம் பயன்படுத்த இடம் ஒதுக்கியிருந்தது.
ஆனால், தனியார் பள்ளி நிர்வாகம், அரசு பள்ளி மாணவர்கள் விளையாட அனுமதிக்கவில்லை. தற்போது, அந்த இடத்தை அறநிலையத்துறை மீட்டுள்ள நிலையில் மாநகராட்சி, அரசு பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளின் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதற்கு திட்டமிட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.