கூட்டுறவு சங்கங்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் செயல்: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
பதவியை தற்போது சட்டவிரோதமாக மூன்றாண்டுகள் என மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இது ஒரு ஜனநாயக படுகொலை என்றார் எடப்பாடிபழனிசாமி;
லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கூட்டுறவு சங்கங்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் நடவடிக்கை ஜனநாயகப்படுகொலை என்றார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு சங்கங்களின் ஆயுட்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதனை ஆரம்ப நிலையிலேயே தாங்கள் எதிர்ப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:5 ஆண்டு ஆயுட்காலம் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிலையை 3 ஆண்டாக குறைப்பதாக சட்ட முன்வடிவு கொண்டு வந்திருக்கிறார்கள். கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதற்கு தனி ஆணையம் உள்ளது. அதன் மூலமாகத்தான் கூட்டுறவு சங்க இயக்குனர்கள், தலைவர்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பதவியை தற்போது சட்டவிரோதமாக மூன்றாண்டுகள் என மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இது ஒரு ஜனநாயக படுகொலை. ஒரு கூட்டுறவு சங்கத்தில் தவறு ஏதும் நடைபெற்றால், அந்தக் கூட்டுறவு சங்கத்தை மட்டும் நீக்க முடியும்.சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த சங்கங்களை வேண்டுமென்றே திட்டமிட்டு கலைக்கிறார்கள்.தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு சிறப்பான செயல்பாடுகள் தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது.
நேற்றையதினம் தியாகராயநகரில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.ஏதோ முறைகேடு நடைபெற்றது போலவும் அது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். Area based development என்ற மத்திய அரசின் திட்ட அடிப்படையில்தான் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை.ஐஏஎஸ் தலைமையிலான குழுதான் அவற்றை கண்காணித்து தலைமைப் பொறியாளர்கள் தலைமையில்தான் பணிகள் நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு தற்போது திட்டமிட்டு முடக்கி வருகிறார்கள்.பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு 15,16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.கொடுக்கின்ற அந்த பொருட்களும் தரமானதாக இல்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களை கலைக்க திமுக அரசு நினைக்கிறது.கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர கூட்டுறவு சங்கங்களை கலைக்கக் கூடாது. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது திமுகவைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு மாதிரியும் எதிர்க் கட்சியாக இருந்தால் வேறு மாதிரியும் நடந்து கொள்கின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே அதில் வழங்கப்பட்ட பருப்பு உள்ளிட்ட பொருட்களை வடமாநிலங்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து கொடுத்துள்ளனர் காரணம் அதில் கமிசன் லஞ்சம் பெறுவதற்காகத்தான் உள்ளூரிலேயே பெற்றுக் கொடுத்தால் அதில் உள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிடும் அதை மறைக்கவே பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார் டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அது நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றார் எடப்பாடி பழனிசாமி.