மாஸ்க் அணியாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதியில்லை
மாஸ்க் அணியாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதியில்லை என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
தேர்தலில் ஓட்டுப்போட செல்பவர்கள் மாஸ்க் அணியாமல் சென்றால் வாக்களிக்க அனுமதியில்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்து கூறுகையில், 'தேர்தல் நாளான நாளை மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட போகவேண்டும். மாஸ்க் இல்லையெனில் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒட்டு போட வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் படிப்படியாக உயர்ந்து 85 ஆயிரம் சோதனைகளில் 3,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்.,7ம் தேதிக்கு பிறகு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையை முழுவீச்சில் செய்ய உள்ளோம். தமிழகத்தில் மத்திய அரசிடம் இருந்து 54 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தாலும், 32 லட்சம் டோஸ் மட்டுமே போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தால் தடுப்பூசி போடுவது குறைந்துள்ளது. 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு 75 முதல் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு மீ்ண்டும் ஏற்பட வாய்ப்பில்லை. சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பு இருக்காது. 45 வயதுக்கு அதிகமானவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை' என்றார்.