சென்னை முகலிவாக்கத்தில் திருக்குறள் உலக சாதனை திருவிழா
சென்னை முகலிவாக்கத்தில் திருக்குறள் உலக சாதனை திருவிழா நடைபெற்றது.;
2053 திருக்குறள் புத்தகங்களை கொண்டு வடிவமைத்திருந்த திருவள்ளுவரின் உருவம்.
சென்னை அருகே மாங்காடு அடுத்த முகலிவாக்கத்தில் 2053 வது திருவள்ளுவர் ஆண்டை முன்னிட்டு இன்டர்நேஷனல் ரெக்கனைஸ்ட் உலக சாதனை சார்பில் திருக்குறள் உலக சாதனை திருவிழா நடைபெற்றது.
இதில் 2053 திருக்குறள் புத்தகங்களை கொண்டு திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைத்திருந்தனர். 1330 அடி திருக்குறள் மற்றும் விரிவாக்கம் கொண்ட பேனர் 133 அதிகாரத்தை பதாகைகளாக வைத்து உலக சாதனை படைத்தனர்.
அதுமட்டுமின்றி 3 வயது சிறுமி திருவள்ளுவர் வேடம் அணிந்து மூன்று நிமிடத்தில் 30 திருக்குறளை ஒப்புவித்து முக்கனிகளை வண்ணம் தீட்டியதும், 6 வயது சிறுமி 15 நிமிடத்தில் 22 கலைகளை தொடர்ச்சியாக செய்து காட்டியதும், 8 வயது மாணவன் நான்கு கால் ஓட்டத்தை 22 நொடியில் 100 மீட்டர் தொலைவில் ஓடியும், 11 வயது மாணவன் ஒரு நிமிடத்தில் 500 நேர்குத்து பயிற்சி செய்தும், 11 வயது மாணவன் கண்ணை கட்டிக்கொண்டு கீபோர்டை தலைகீழாக வைத்துக்கொண்டு பாடலுக்கு இசையமைத்தும் உலக சாதனைகளை நிகழ்த்தினர்.
இவை அனைத்தும் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம் ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனையில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.