இரயில் நிலைய மறு சீரமைப்பு திட்டத்தில் கொங்கு மண்டலம் நிராகரிப்பு: கொமதேக புகார்

Tamil Nadu Political News in Tamil -கொங்கு மண்டல இரயில் நிலையங்களையும் சேர்க்க தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென கொமதேக கோரிக்கை

Update: 2022-10-26 10:00 GMT

கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன்(பைல் படம்)

Tamil Nadu Political News in Tamil -இரயில் நிலைய மறு சீரமைப்பு திட்டத்தில் கொங்கு மண்டலம் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது. மறு சீரமைப்பு திட்ட பட்டியலில் கொங்கு மண்டல இரயில் நிலையங்களையும் சேர்க்க தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலரும் திருச்செங்கோடு எம்எவ்ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இரயில் நிலைய மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 10 மாவட்ட இரயில்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் எந்த ஒரு இரயில் நிலையமும் மறு சீரமைப்பு திட்ட பட்டியலில் இடம் பெறாதது கொங்கு மண்டல பகுதியை புறக்கணிக்கும் செயலாகும். தென்னக இரயில்வேயில் கோவை இரயில் நிலையம் மட்டுமே மூன்றாவது அதிகமான வருமானம் ஈட்டிக் கொடுக்கும் முக்கிய இரயில் நிலையமாக திகழ்கிறது.

மேலும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மாவட்டங்களிலிருந்து அதிகப்படியான வருமானம் தென்னக இரயில்வேக்கு கிடைக்கும் சமயத்திலும் இந்த பகுதியில் உள்ள எவ்வளவோ இரயில் நிலையங்கள் மேம்படுத்த வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும் பொழுது எந்த ஒரு இரயில் நிலையத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அந்த இரயில் நிலையம் மூலமாக வரும் வருமானத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு அதற்கு உண்டான வளர்ச்சி திட்டங்களை செய்யாமல் விடுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது. 

கொங்கு மண்டலத்தில் அதிகமான தொழிற்சாலைகள் இருந்தாலும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை அழைக்கப்பட்டாலும் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விமான போக்குவரத்து மூலம் செய்யும் போது அதிக நிதி செலவாக கூடிய சூழ்நிலையில் சாலை மற்றும் இரயில் மார்கமாகவே அதிகமான போக்குவரத்து நடை பெரும் சூழ்நிலை உள்ளது. சாலை மார்க்கமாக செல்லும் போது டோல்கேட் மூலம் வசூல் செய்கிறார்கள். இரயில் மூலம் போக்குவரத்து செய்வதற்கு வசதி வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு என பல மாநகராட்சிகள் இருந்தும் அதில் உள்ள ஒரு ரயில் நிலையம் கூட மறு சீரமைப்புக்காக தேர்வு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. 

கொங்கு மண்டல வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்கள் எளிமையாக தங்களுடைய பொருட்களை வேறு பகுதிகளுக்கு அனுப்பவும், வேறு பகுதியில் இருந்து இப்பகுதிக்கு பொருட்களை கொண்டு வரவும், இப்பகுதி பொதுமக்கள் மற்றும் இங்கு வரும் மற்ற மாநில தொழிலார்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் எளிமையாக சென்று வரவும், கல்லூரி மற்றும் மருத்துவத்திற்கு கொங்கு மண்டலத்துக்கு வந்து செல்பவர்களுக்கும், கேரள மாநிலத்துக்கு செல்லும் முக்கிய இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையங்களை மேம்படுத்துவது ஒன்றிய அரசின் தார்மீக கடமை ஆகும்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொங்கு மண்டலத்தில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு திட்டத்தில் கொண்டு வந்து அதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இரயில் நிலையங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வழியுறுத்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News