விமான நிலையத்தில் இலவச மின்கல வாகனங்கள் மீண்டும் இயக்கம்: பயணிகள் உற்சாகம்
இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது முற்றிலும் இலவச சேவை இந்த மின்கல வாகனங்களில் விமானப்பயணிகள் மட்டுமே செல்கின்றனர்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செனன்னை விமானநிலையத்தில் பயணிகளுக்கான இலவச மின்கல வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பெருமளவு குறைந்ததையடுத்து 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இலவச மின்கல வாகனங்கள் மீண்டும் இயங்க தொடங்கியதால் பயணிகள் உற்சாகமடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் இடையே பயணிகளின் வசதிக்காக, விமான நிலைய நிா்வாகம் மின்கல வாகனங்களை இயக்கி வருகிறது. இந்த வாகனங்கள் சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படுகிறது. பயணிகளை கட்டணம் இல்லாமல், இலவசமாக உள்நாட்டு முனையத்தில் இருந்து சர்வதேச முனையத்திற்கும், சர்வதேச முணையத்திலிருந்து உள்நாட்டு முனையத்திற்கும் அழைத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்சகட்டத்தை அடைந்ததை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் இந்த மின்கல வாகனங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று மாறி மாறி வந்துகொண்டிருந்தது.ஒரு அலைக்கும் மற்றொரு அலைக்கும் இடையே கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபோதுகூட, நிறுத்தப்பட்ட மின்கல வாகனங்கள் மீண்டும் இயக்கப்படாமல் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக உள்நாட்டு முணையத்திலிருந்து சா்வதேச முணையம் செல்லும் பயணிகளை ஏற்றி செல்வதற்கு ஒரிரு மின்கல வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.ஆனால் அதில் மற்ற பயணிகள் ஏற அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. அதுவும் தமிழ்நாட்டில் மாநில அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் பெருமளவு குறைந்து, மாநிலம் முழுவதும் சகஜநிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன.மேலும் சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு நடத்தப்பட்ட ரேபிட் பரிசோதனை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. RT PCR பரிசோதனையும் குறைக்கப்பபட்டுள்ளது.இதனால் பரிசோதனைகளுக்காக பயணிகளை ஏற்றி செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்கல வாகனங்களின் சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இது இந்த பேட்டரி வாகனங்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இயங்குகின்றன. உள்நாட்டு மற்றும் இருந்து சர்வதேச முணையங்கள் இடையே பயணிகளை, குறிப்பாக வயதானவர்கள், நோயாளிகள், பெண்கள்,குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பயணிகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்றி செல்கின்றனர். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது, முற்றிலும் இலவச சேவை. ஆனால் இந்த மின்கல வாகனங்களில் விமான பயணிகளை மட்டுமே ஏற்றுகின்றனர். பயணிகள் அல்லாத பார்வையாளர்கள், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போன்றவர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.
இந்த மின்கல வாகனங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு, தரை தளத்தில் உள்ள வருகை பகுதியிலும், மேல்தளத்தில் உள்ள புறப்பாடு பகுதியிலும் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், மேல்தளத்தில் புறப்பாடு பகுதியில் பேட்டரி வாகனங்கள் இயக்கப்படவில்லை. தரை தளத்தில் வருகை பகுதியில் மட்டுமே பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்கல வாகனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கி இருப்பது விமானப் பயணிகளிடையே உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த மின்கல வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.