சென்னையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
கோவில் திருவிழாவில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டச் சென்ற சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
சென்னை திருவிக நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜானகிராமன் தெரு பகுதியில் உள்ள ஸ்ரீதேவி அங்காளம்மன் கோவிலில் நேற்று மாலை மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் திருவிழாவில் சில இளைஞர்கள் கத்தியுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருவிக நகர் போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கிடமான நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் புளியந்தோப்பு நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த முரளி வயது 28. மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் என நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவிழாவில் கலந்துகொண்ட 15 வயது சிறுவனை சாமி ஊர்வலத்தின் போது தேவராஜ் என்பவர் தாக்கியுள்ளார். அதற்கு பழிவாங்க சிறுவன் மற்ற மூன்று நபர்களையும் அழைத்துக்கொண்டு அவரை வெட்ட சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முரளி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.