ஊரடங்கு தளர்வுகள் அலட்சியம் வேண்டாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து விட்டார்கள் என்பதற்காக அலட்சியமாக இருக்காதீர்கள் என்றும், கட்டுப்பாடுகளை ஒழுங்காக கடைப்பிடித்தால் எந்த அலையும் உள்ளே வர முடியாது என்றும், பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது தான் மீண்டு வருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளையும் முழுமையாக கடைபிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளொன்றுக்கு 36 ஆயிரத்தை தொட்ட பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறது. இது முழு ஊரடங்கு, டாக்டர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் துடிப்பான நிர்வாகம் ஆகிய நான்கின் காரணமாக தான் இந்த வெற்றியை நம்மால் பெற முடிந்தது.
மேலும் கொரோனாவை நாம் கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர முழுமையாக ஒழித்து விட்டோம் என்று சொல்ல முடியாது.
எனவே மக்கள் யாரும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது தளர்வுகள் அறிவித்து விட்டார்கள் அதனால் நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும் நினைக்க கூடாது.
உணவகம், கடைகள் மற்றும் முக்கிய சேவைகள் பொதுப்போக்குவரத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்கு காரணம் மக்களின் வாழ்வாதாரத்தில் மீது உள்ள அக்கறையில் தான்.
ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சிரமம் இருக்கிறது அதேபோல் மாநிலத்தின் பொருளாதாரமும் முடக்கம் அடைகிறது ஆகிய மூன்று காரணங்களால் தான் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நாம் ஒழுங்காக கடைப்பிடித்தால் எந்த அலையும் உள்ளே வரமுடியாது எனவே மக்கள் எல்லோரையும் நான் கேட்டுக்கொள்வது தளர்வுகள் தரப்பட்டு விட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.