கோடநாடு கொலை வழக்கு-சசிகலாவிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது
சசிகலாவிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணையில் 200 கேள்விகள் வரை கேட்கப்பட்டது இன்று 300 கேள்விகளுடன் தனிப்படை விசாரிக்க உள்ளது
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சசிகலாவிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 200 கேள்விகள் வரை கேட்கப்பட்ட நிலையில் இன்றும் தனிப்படை விசாரிக்க உள்ளது.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்.24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட போலீஸார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, கோடநாடு வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன், உறவினர் மகன், நேர்முக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடத்தினர். இதுவரை கோடநாடு வழக்கு தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து. கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவர் சசிகலா என்பதால், எஸ்டேட் வளாகத்துக்குள் உள்ள பொருட்கள் குறித்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட சிலருக்கே தெரியும்.
எனவே, கோடநாடு எஸ்டேட்வளாகத்துக்குள் என்னென்ன பொருட்கள் இருந்தன? அதில் இருந்து கொள்ளை சம்பவத்துக்கு பிறகு காணாமல் போன பொருட்கள் என்னென்ன என்பன குறித்து சசிகலாவிடம் விசாரித்து தகவல்களைப் பெற போலீஸார் திட்டமிட்டு (21-ம் தேதி) விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி நேற்று 21ம் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 200 கேள்விகள் வரை கேட்கப்பட்ட நிலையில் இன்றும் 300 கேள்விகளுடன் தனிப்படை விசாரிக்க உள்ளது.