ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் இடம்பெற்ற புதிய தலைமை செயலக கல்வெட்டு
புதிய சட்டசபை திறப்புக்கான கல்வெட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.;
புதிய சட்டசபை திறப்புக்கான கல்வெட்டு, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில், புதிய சட்டசபையுடன் கூடிய தலைமை செயலக வளாக கட்டடம், திமுக ஆட்சியில் முன்னதாக கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தை, 2010 மார்ச், 13ம் தேதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், காங்., முன்னாள் தலைவர் சோனியா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்டடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆங்கிலம் மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்டு, கட்டடத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டது. அதிமுக அரசு மீண்டும் 2011ல் பொறுப்பேற்றவுடன், இந்த கட்டடத்தை உயர்சிகிச்சைக்கான அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது. இதையடுத்து, புதிய சட்டசபை திறப்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு, அங்குள்ள அறையில் பத்திரப்படுத்தப்பட்டன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசு பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்ததற்கான கல்வெட்டு புதிதாக வைக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்கு, இங்கு உயர் சிகிச்சைகளை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய அரசு மருத்துவகல்லுாரி கட்டப்பட்டு, மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். திமுக., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசு பல்நோக்கு மருத்துவமனை, மீண்டும் புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலகமாக மாற்றப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.
சமீபத்தில், நடந்த சட்டசபை கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.,க்களும், இந்த கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை அகற்றி சட்டசபையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஏற்கனவே இருந்த இடத்தில் சட்டசபை திறப்பு நிகழ்ச்சிக்கான கல்வெட்டுக்கள், நேற்று மீண்டும் வைக்கப்பட்டன. ஆனால், மருத்துவமனை திறப்பிற்கான கல்வெட்டுக்கள் அகற்றப்படவில்லை. மீண்டும் சட்டசபை திறப்பு நிகழ்ச்சிக்கான கல்வெட்டு வைக்கப்பட்டு உள்ளதால், நோயாளிகள், அதிச்சி அடைந்துள்ளனர்.