முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க. தலைவராக மு. க. ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறை அவர் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தற்போது முதலமைச்சராக இருப்பதால் அவர் இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது தி.மு.க. முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தி. மு.க.பிரமுகர்கள் விழாக்கள் நடத்தி இனிப்பு வழங்கி வருகிறார்கள்.
காங்கிரஸ், ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களும் மு. க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஸ்டாலினை சென்னையில் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் எம்.பி. யுமான பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன் சென்னையில் இன்று தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், திருச்சி சாகுல் அமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்று இருந்தனர். தி.மு.க. பொருளாளர் டி. ஆர். பாலு எம். பி.யும் அப்பொழுது ஸ்டாலினுடன் இருந்தார்.