தென்மேற்கு பருவமழை இயல்பை விட தமிழ்நாட்டில் அதிகமாக பெய்துள்ளது
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
11 ஆம் தேதி வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. இதனால் தமிழ்நாட்டில் மழை வெகுவாக குறையும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இயக்குனர் புவிவரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய பகுதிகளின் விவரத்தை தெரிவித்தவர், வரும் 11ஆம் தேதி வடக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், உருவாகும் பட்சத்தில் அதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு வெகுவாக குறையும் என தெரிவித்தார்.
தென்மேற்கு பருவக்காற்று வலுவிழந்த காரணத்தினால் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இந்த பருவமழை காலத்தில் அதிகமாக மழை கிடைத்துள்ளது எனவும் இயல்பாக இந்த பருவகாலத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை 130.2 மி.மீ மழை தமிழ்நாட்டில் பெய்யும் ஆனால் ஜூன் 1-ஆம் தேதி முதல் இன்று வரை மட்டுமே (ஜூலை 9-ஆம்) தமிழகத்தில் 127.5 மி.மீ மழை பதிவாகி உள்ளது என தெரிவித்தார்.
வரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடையும் காரணத்தால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரள கர்நாடகப் பகுதிகளில் அதிக மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்