இரண்டு காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கல்
துயரச் சம்பவங்களால் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.;
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 17ஆம் தேதி கோவில் உண்டியலை களவாட வந்த நபர்களால் கோவில் ஒப்பந்த காவலர் பாபு என்பவர் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தம்பு செட்டி தெரு அருள்மிகு நாகப்பசெட்டி பிள்ளையார் கோவிலில் கடந்த 5ம் தேதி பூட்டியிருந்த கோவிலின் முகப்பில் நின்று சுவாமி தரிசனம் செய்த திவாகர் என்பவர் கோவில் திருப்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் எதிர்பாராத விதமாக அவர் மீது விழுந்து உயிரிழந்தார்.
இந்த இரண்டு துயரச் சம்பவங்கள் அறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அக்குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன் உயிரிழந்த காவலர் பாபு மற்றும் திவாகர் அவரது குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நிதியாக வழங்கினார்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.