பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது: ஓபிஎஸ்
பஞ்சாப் முதல்வருக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்;
பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி சம்பவம் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது: உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று சொன்னால் அது மிகையாகாது. கிட்டத்தட்ட 135 கோடி மக்கள் தொகையையும் 95 கோடி வாக்காளப் பெருமக்களையும் கொண்ட இந்தியா என்கிற ஜனநாயக நாட்டில் பிரதமர் என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும் தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள ஒன்றாகும்.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பதவியை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் ஜனவரி 5 ஆம் தேதி டெல்லியிலிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டாவுக்கு விமானம் வாயிலாக சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையோரம், உசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ள தேசிய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பெரோஸ்பூரில் துவக்கி வைக்கும் வண்ணம் பிரதமரின் பயணம் திட்டமிடப்பட்டு இருந்தது.
பிரதமர் திட்டமிட்டபடி பதிண்டா விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பதிண்டா விமான நிலையத்திலிருந்து உசைனிவாலா கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இயலாத நிலையில், சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டு, இது குறித்து தகவல் பஞ்சாப் மாநில காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் பிரதமரும் சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டார்.
இந்த நிலையில், உசைனிவாலாவுக்கு முப்பது கிலோ மீட்டர் முன்பு அங்குள்ள பாலத்திற்கு அருகில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற காரணத்தைக் காட்டி பிரதமரின் வாகனங்கள் இருபது நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. இருபது நிமிட காத்திருப்பிற்குப் பிறகும் பிரதமரின் வாகனங்கள் தொடர்ந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பிரதமர் வேறு வழியின்றி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பியுள்ளார்..
பதிண்டா விமான நிலையத்திலிருந்து தில்லிக்கு புறப்படும முன்பு அங்கிருந்த அதிகாரிகளிடம் நான் விமான நிலையத்துக்கு உயிருடன் வந்து சேர்ந்துவிட்டேன். என் நன்றியை உங்கள் முதல்வரிடம் கூறுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இவையனைத்தும் பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளன. பிரதமரின் பாதுகாப்பில் மெத்தனப் போக்கை கடைபிடிப்பது என்பதும், குளறுபடி ஏற்படுத்துவது என்பதும் அவரைக் காக்க வைப்பது என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மரபு மீறிய செயலாகும்.
பிரதமரின பாதுகாப்பில் இது போன்ற மிகப் பெரிய தவறு அண்மையில் ஏற்பட்டதில்லை என்று மத்திய அரசின் உயரதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பிரதமர் என்பவர் ஒரு தனி மனிதரல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதமர். எனவே பிரதமருக்கு சட்டப்படி என்னென்ன பாதுகாப்பினைத் தர வேண்டுமோ மரபுப்படி என்னென்ன மரியாதையை செய்ய வேண்டுமோ விதிப்படி என்னென்ன வசதிகளை செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய வேண்டியது ஒரு மாநில அரசின் கடமை. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை.
பதிண்டா விமான நிலையத்திற்குச் சென்று பிரதமரை பஞ்சாப் முதல்வர் வரவேற்காதது. அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் மாநிலக் காவல் துறையினர் செய்யாதது, எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் அவரை திரும்பிச் செல்ல வைத்தது ஆகியவற்றை பார்க்கும்போது தனது கடமையைச் செய்ய பஞ்சாப் மாநில அரசு தவறிவிட்டது. அந்த மாநில முதல்வர் தவறிவிட்டார் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இதன்மூலம் சட்டத்தை மீறியதோடு சுதந்திர போராட்டத் தியாகிகளையும் பஞ்சாப் மாநில அரசு அவமதித்து இருக்கிறது. பாரத பிரதமருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பை மரியாதையை தராத சுதந்திர போராட்டத் தியாகிகளை அவமதித்த பஞ்சாப் முதல்வருக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உண்டு என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.