இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதி பொறுப்பேற்பு
இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் பொறுப்பேற்றுக் கொண்டார்;
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் சென்னையில் பொறுப்பேற்றார்.
இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கிழக்கு பிராந்திய தளபதியாகச் செயல்பட்டு வந்த ஏ.பி.படோலா புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல் படை தலைமையகத்தில் துணை இயக்குநர் ஜெனரலாக (கொள்கை மற்றும் திட்டங்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கிழக்கு பிராந்திய தளபதியாக டோனி மைக்கேல் நியமிக்கப்பட்டதை யடுத்து செவ்வாய்க்கிழமை சென்னை விமானப் படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாகப் பொறுப் பேற்றுள்ள டோனி மைக்கேல், சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பயின்றவர். 1990-ம் ஆண்டு இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார். டோனி மைக்கேல் இந்திய கடற்படை அகாடமியில் கல்வியில் சிறந்து விளங்கியதற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.
ஸ்வீடனின் உலக கடல்சார் பல்கலைக்கழகத்தில் கடல்சார் விவகாரங்களில் முதுகலைப் பட்டம் பெற்றுளார். தில்லி பல்கலைக் கழகத்தில் எல்.எல்.பி சட்டக் கல்வியைப் பெற்றுள்ளார்.
தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்றியதற்காக அவரது துணிச்சலான தலைமைப் பண்பிற்கான கடலோரக் காவல் படையின் கெலன்ட்ரி பதக்கம் அவருக்கு வழங்கப் பட்டது. கிழக்குப் பிராந்தியத் தளபதியாகப் பொறுப்பேற்ற டோனி மைக்கேலுக்கு முன்னாள் பிராந்தியத் தளபதி ஏ.பி.படோலா மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.