கிராமியப் பெண்களின் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளையராஜா கொரோனா தொற்றால் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் மிக பிரபலமான ஓவியரான இளையராஜா வயது 43. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இளையராஜா உயிரிழந்தார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர் ஓவியர் இளையராஜாவும் வாழ்வார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் மறைவுக்கு திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், என முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.