உலோகக் கழிவுகளை கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனை
கடந்த ஏப்.26-ம் தேதி நொந்தாஸ் கப்பலிலிருந்து ஒரே நாளில் 4,500 டன் இறக்குமதி செய்யப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டது;
உலோகக் கழிவுகளை கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனையை புதன்கிழமை எட்டியுள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னைத் துறைமுகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னைத் துறைமுகத்திற்கு உலோகக் கழிவுகளை (ஹெவி மெல்டிங் ஸ்கிராப்) ஏற்றிய நிலையில் எம்.வி. அட்லாண்டிக் பல்கெர் என்ற சரக்குக் கப்பல் துறைமுகத்திலுள்ள ஜவகர் கப்பல் தளத்திற்கு புதன்கிழமை வந்தடைந்தது. உலோகக் கழிவுகளை இறக்கும் பணி தொடங்கி 24 மணி நேரத்தில் 7,237 மெட்ரிக் டன் இறக்குமதி செய்து புதிய சாதனை அளவு எட்டப்பட்டது. இதன்மூலம் கடந்த ஏப்.26-ம் தேதி எம்.வி.கேப்டன் நொந்தாஸ் என்ற கப்பலிலிருந்து ஒரே நாளில் 4,500 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்ட சாதனை அளவு முறியடிக்கப்பட்டது.
இதனையடுத்து உலோகக் கழிவுகளை இறக்குமதி செய்த இறக்குமதியாளர் சூர்யதேவ் அலாய் என் பவர் பிரைவேட் லிமிடெட், கப்பல் முகவர் மெர்ச்சென்ட் சிப்பிங் சர்வீசஸ், கப்பலிலிருந்து இறக்கும் பணியில் ஈட்பட்ட பிஎம்பி ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.