தமிழகத்தில் கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது அனைவரையும் மிரட்டி வருகிறது. கொரோனா சிகிச்சையின் போது ஸ்டெராய்டுகள் அளிக்கப்படுகின்றது. உடலில் ஸ்டெராய்டுகள் மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களது உடலை இந்த கருப்பு பூஞ்சை எளிதாகத் தாக்குகிறது.
தமிழகத்திலும் (Tamil Nadu) நாளுக்கு நாள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று தமிழக அரசு கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ளார்.
தற்போது பெருகி வரும் கருப்பு பூஞ்சை (Black Fungus) நோய்க்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தவிர தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த முகமைகள் மூலம் ஏற்பாடு செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.