10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்
கிராமப்புறப்பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்;
தமிழகம் முழுவதும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த அரசு பேருந்துகளை விரைவில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் ஒன்றியத்தின் ஊரக உள்ளாட்சித்தேர்தல் பணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன், தேர்தல் பரப்புரையின் போது மேலும் அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியின்போது கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 35 ஆயிரமாக இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற 2 மாதத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. இதை விரைவில் இயக்க திட்டமிட்டுள்ளோம். அத்துடன் தமிழக அரசுக்கு தேவையான புதிய பேருந்துகளையும் வாங்க திட்டமிட்டுள்ளோம். அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் கிராமப்புற மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பார் என உறுதியளிக்கிறேன். தேவைப்படும் கிராமங்களுக்கு மருத்துவமனை அமைத்து தர அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.