தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ, கொரோனா பாதுகாப்பு மையங்கள் தொடங்க சென்னை மாநகராட்சியை அணுகலாம் என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.20) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்பொழுது அதிகரிக்கத் தொடங்கியுள்ள காரணத்தினால், அதாவது நாளொன்றுக்கு 2,000 முதல் 2,500 நபர்கள் வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வசிப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை பெறும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியுள்ள தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்களை ஆரம்பிக்க பெருநகர சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கிறது.
அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள் படுக்கை வசதி, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலரை (தலைமையகம்) (94450 26050) அணுகுமாறு ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.