சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , வீட்டு தனிமையில் வைக்கப்பட்டிருப்பவர்களை கண்காணிக்க மருத்துவ இறுதியாண்டு மாணவர்கள் 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு கட்டுப்பாட்டு மையங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் பணிகளை நேரில் பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இடுகாடுகளில் 24 மணிநேரமும் உடல்களை தகனம் செய்வதில் சிக்கல் உள்ளது , அவ்வாறு செய்தால் தகன இயந்திரம் பழுதடைந்துவிடும். பராமரிப்பு பணிகளை தினமும் முடித்த பின்னர்தான் இயந்திரம் மறு இயக்கம் செய்யப்படும்" என தெரிவித்தார்.
மேலும் மக்கள் காலியாக உள்ள இடுகாடுகளை இணையம் வாயிலாக அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தகவல் தொழில்நுட்ப துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வசதியானது துரித நடைமுறையில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மயானங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கும் பொருட்டு , சென்னையில் உள்ள அனைத்து மயானங்களிலும் சிசிடிவி பொருத்தும் பணிகள் நடைப்பெற்றுவருகின்றன. அதிகாரிகள் தங்கள் செல்போன் மூலம் அவற்றை கண்காணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.