2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு, தொழில்துறை சார்பில் "ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு" எனும் ஏற்றுமதி மாநாடு தொடங்கியது
தமிழகத்தில் 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியை பெருக்க வேண்டும என்று தமிழக மு.க முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு, தொழில்துறை சார்பில் "ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு" என்னும் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது:
தொழில் முனைவோர் மாநாட்டில் 2,120 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது . இதன் மூலம் 41.695 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். ஊரக தொழில் துறை சார்பில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், தொழில் துறை சார்பில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தொழில் முனைவோர் மாநாட்டில் மொத்தம் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தொழில் வளர்ச்சி என்பது அனைத்து துறை வளர்ச்சி என்பதை நாம் அனைவரும் நம்ப வேண்டும். தொழில் வளர்ந்தால்தான் அனைத்து துறைகளும் வளரும். இதே போல, சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுதும் தொழில்துறை சார்ந்த மாநாடுகள் நடத்த, அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியாக மட்டுமல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியாக இருந்து வருகிறது. இந்திய அளவில் தொழில்துறையில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை உலக அளவில் சந்தை படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் பரவலாக ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில், மாநல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் பொருளாதார வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். Made in India என்பதையும் தாண்டி, உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும். 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியை பெருக்க வேண்டும் என்பதை, தமிழ்நாடு அரசு இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது என்றார் முதல்வர் ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மத்திய அரசின் கூடுதல் வர்த்தக செயலாளர் சஞ்சீவ் தத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.