'சசிகலா அதிமுகவில்' ? துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பரிசீலிப்போம் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறினார்.;
அதிமுகவின் அமைப்பை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் ,
கழக ஆட்சி என்றால் அதிமுக ஆட்சிதான். அதை நினைத்து சசிகலா சொல்லியிருந்தால் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உண்மையில் வரவேற்கிறேன். அதனை அவரது பெருந்தன்மையாகத்தான் நான் பார்க்கிறேன்.
அவர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. முதலில் இருந்தே அவர் மீது வருத்தங்கள் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சில சந்தேகங்கள் பொதுவெளியில் அவர் மீது இருந்தன. சில பிரச்சினைகளில் அவருக்கு அவப்பெயர் உருவாகக்கூடிய சூழல் இருந்தது. அதனால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வைத்து நிரபராதி என நிரூபித்தால் அவர் மீதிருந்த அவப்பெயர் விடுபடும் என்றுதான் சொன்னேன்.
அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. நான் சசிகலாவுடன் இருந்திருக்கிறேன். 32 ஆண்டு காலம் அவர் ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு வேண்டிய உதவிகளை செய்தார் என்கிற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது.ஜனநாயக முறையில் இப்போது அதிமுக இயங்குகிறது. தனிப்பட்டவருக்காகவோ, குடும்பத்திற்காகவோ இயங்கவில்லை. இந்த அமைப்பை அவர் ஏற்றுக்கொண்டால் அவரை ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.