சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு: வைகோ
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டுமென மதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில், வேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர்.
அதன்படி, 2009,10,11 ஆம் ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முறையில், 31,170 பட்டதாரி ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்தனர். 22,351 பேர் கலந்து கொண்டனர். 8819 பேர் கலந்து கொள்ளவில்லை.
சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடித்த 11,161 பேர், தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்ந்து விட்டனர். 2011 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நிலையில், எஞ்சியவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. 2011 -ஆம் ஆண்டு அண்ணா திமுக ஆட்சி வந்த பிறகு, 23.6.2012 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, 340 பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் பணி ஆணை வழங்கினர்.
இந்த நிலையில், ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம், (National Council of Teacher Education-NCTE) இனி, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தித்தான் தேர்வு செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த அறிவிப்பில், விதி 5 இன்படி (Clause V), ஏற்கெனவே பணி நியமன நடவடிக்கைகளில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என விதிவிலக்கு அளித்தது.
அதன்பிறகு, இனி, தகுதித் தேர்வு நடத்தித்தான் ஆசிரியர்களைத் தேர்வு செய்வோம் என அதிமுக அரசு அறிவித்து, Teachers Eligibility Test-TET தேர்வு நடத்தினர். அந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, 2013 இல் 15000, 2014 இல் 15000 பேருக்கு வேலை அளித்தனர். 'முன்பு சான்று ஆவணங்களைச் சரிபார்ப்பு முடிந்து, பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்' என, திமுக தலைவர் கருணாநிதி , 22.07.2013 அன்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அதிமுக ஆட்சியாளர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
பதிவு மூப்பு அடிப்படையில், சான்று ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த பிறகு, 1258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் உட்பட சுமார் 5000 பேர் பணி நியமனம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.அந்த வழக்கில், '2012 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள், கிளாஸ் 5 விதியின்படி. இனி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய தேவை இல்லை; காலிப் பணி இடங்கள் ஏற்படும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு அளித்தது.
தற்போது, தமிழ்நாடு முழுமையும் அரசுப் பள்ளிகளில் 6 இலட்சம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து இருப்பதாக, அரசு அறிவித்து இருக்கின்றது. எனவே, பல்லாயிரக்கணக்கான புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. விரைவில், புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்து இருக்கின்றார். இந்தச் சூழ்நிலையில், ஏற்கெனவே காத்திருப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துவதுவதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.