சென்னை சென்ட்ரலில் மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்!
கொரோனாவை தடுக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சார்பில் ரயில் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க மூலிகையுடன் கலந்த ஆவி பிடிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் கூடவே கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெட்ரோல் பங்குகளில் மூலிகை ஆவி பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.'
சங்ககிரி ரோட்டில் உள்ள திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பெட்ரோல் பங்கில், சுவாசத்தை சுத்தமாக்கவும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய குக்கரில் ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி, துளசி, வேம்பு, கிராம்பு, மிளகு, மஞ்சள், எலுமிச்சை, உப்பு, இஞ்சி, வெற்றிலை உள்ளிட்ட 12 மூலிகை பொருட்களை போட்டு கொதிக்க வைத்து, இதில் உருவாகும் ஆவியை குழாய்களில் கொண்டு வந்து, 4 இடங்களில் ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலம் முடியும் வரை இம்முறை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.