சென்னை: கொரோனா நோயாளிகள் காணொலியில் ஆலோசனை பெறும் புதிய சேவை அறிமுகம்!
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை பெறும் புதிய சேவையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 48,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 35,000 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணொலி காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க கூடுதலாக வாட்ஸ் அப் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 94983 465 10 என்ற எண்ணும் அலைபேசியில் கடைசி எண்ணை மாற்றி 11, 12, 13, 14 என்ற எண்ணில் ஆலோசனைகள் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக பொதுமக்கள் மருத்துவர் ஆலோசனை பெற gccvidmed என்ற செயலியும் செயல்பட்டு வருகிறது. கொரோனா குறித்த சந்தேகங்களை பெறவும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை தடுப்பூசி தகவல்கள், விவரங்களை பெறவும் இது தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் மாநகராட்சியில் 1913 என்ற எண்ணிலும் 04425384520 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.