மாணவர்களுக்கு உடனடி சாதி, வருமானச் சான்றிதழ்; அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

மாணவ-மாணவியர்களுக்கு வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-29 12:21 GMT

வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதால் மாணவ-மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச் சான்றிதழ் ,சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமுமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை கூட்ட நெரிசல் இன்றி பெற்றுச்செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் வருவாய்த்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News